கட்டுரை

2013 தமிழ் பேசும் பிரதமர்?

நாகராஜசோழன்

குஜராத்தில் மூன்றாவது முறையாக மோடி ஜெயித்ததும் அடுத்தது அவர் நேராக டெல்லிக்குப் போய் பிரதமர் நாற்காலியில் அமர்வார் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அவரது வெற்றி உரையின் போது டெல்லிக்கு நான் ஒரு நாள் செல்வேன் என்றபோது மக்கள் ‘பி.எம்., பி.எம்.’ என்று குரல் எழுப்பினார்கள். மூன்றாவது முறையாக முதல்வர் தேர்தலில் மோடி வென்றிருந்தாலும் பாஜகவில் அவருக்குப் போட்டியாளர்களும் உள்ளனர்.

இந்த ஆண்டு மத்தியபிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும் சட்ட சபைத் தேர்தல்கள் நடக்க உள்ளன. இந்த இருமாநிலங்களிலும் பாஜக முதல்வர்களாக உள்ள சிவராஜ் சிங் சவுகானும், ராமன் சிங்கும் மூன்றாவது முறையாக தங்கள் மாநிலத்தில் வெல்லும் முனைப்பில் உள்ளனர் என்பதையும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்நிலையில் பாஜக சார்பில் மட்டுமின்றி காங்கிரஸ் வென்றால் கூட யார் பிரதமர் ஆவார்கள் என்பது பற்றிய விவாதம் சூடு பிடித்துவிட்டது.

காங்கிரசில் 2004-ல் எந்த மக்கள் செல்வாக்குமே இல்லாத மன்மோகன் சிங்குக்கு திடீர் என்று அதிர்ஷ்டம் அடித்தது. அவரை சோனியா காந்தி தனிப்பட்டமுறையில்  பிரதமர் நாற்காலிக்குத் தேர்வு செய்தார். அவரும் இரண்டுமுறை பிரதமராக அவ்வளவு மெஜாரிட்டி இல்லாத நிலையில் கூட்டணி ஆட்சியை நடத்தி அதன் இறுதிக்கட்டத்தில் உள்ளார். ஐமுகூட்டணியின் முதல் ஆட்சிக்காலம் நன்றாகவே சென்றது. ஆனால் அதன் இறுதிக்கட்டத்தில் நடந்த 2ஜி ஊழல், பொருளாதார நெருக்கடி என்று கெட்ட பெயர் இருப்பினும் அதன் நூறுநாள் வேலைத் திட்டம் போன்ற சாமானிய மக்களுக்கான  திட்டங்கள் மற்றும் எதிரணியில் இருந்த பாஜகவால் வலுவான மாநிலக் கட்சிகளின் கூட்டணியைக் கட்டமுடியாததாலும் 2009 தேர்தலில் மீண்டும்  ஐமுகூட்டணி ஆட்சிக்கு வந்தது.

ஆனால் இரண்டாவது ஆட்சிக்கட்டத்தில் எல்லாம் அனல்தான். விலைவாசி உயர்வு, பணவீக்கம், பொருளாதாரச் சரிவு போன்ற பிரச்னைகள் நாட்டை வாட்டி எடுக்கின்றன. இதைச் சமாளிக்க இப்போது மத்திய அரசு மானியங்களை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணமாக செலுத்தும் திட்டத்தைத் தொடங்கி உள்ளது. இதைக் கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சி இது பணத்தால் வாக்காளர்களை விலைக்கு வாங்கும் முயற்சி என்று விமர்சித்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே மம்தா பானர்ஜி காங்கிரஸ் கூட்டணியை விட்டுக் கழற்றிக்கொண்டுவிட்டார். இப்போதைக்கு சமாஜ்வாதியையும் மாயாவதியையும் நம்பி கப்பலைக் கவிழாமல் ஓட்டிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ். நாடாளுமன்றத்தில் அந்நிய நேரடி முதலீடுக்கு ஆதரவாக 236 வாக்குகளையே பெற்று பல கட்சிகள் எதிர்த்து வாக்குப் போடாததால் தப்பித்தது ஆட்சி.

மாயாவதியும் முலாயமும் முக்கிய பிரச்னைகளில் காங்கிரசுக்கு இதுவரை ஆதரவு கொடுத்தாலும் இனி எப்படிப் போகும் என்று சொல்லமுடியாது. எனவே தேர்தல் குளிர் டெல்லியை இப்போதே பிடித்துக்கொண்டுவிட்டது.

காங்கிரசில் பட்டத்து இளவரசாக உலாவரும் ராகுல் காந்தி 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு வேண்டிய பலரை தேர்தல் களத்தில் இறக்கினார். உதாரணத்துக்கு சிவகாசி தொகுதியில் மாணிக் தாகூர், மத்திய பிரதேசத்தில் மீனாட்சி நடராஜன். அவருக்கு நல்ல பலன் கிடைத்தது. ஆனால் அதன் பிறகு உத்தரபிரதேசம், பீஹார், இப்போது குஜராத் ஆகிய மாநில தேர்தல்களில் இளவரசரின் மாஜிக் எடுபடவில்லை. ஆகவே அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் அவருக்கு மிகவும் முக்கியமானது. “ராகுல் காந்தி சமீபகாலமாக முக்கியபொறுப்புகளை ஏற்கத் தயார் என்று சொல்லிவந்தாலும்கூட அவர் தயக்கத்துடனே இருக்கிறார். காங்கிரஸ் வட்டாரங்களில் சொல்லப்படுவது என்னவெனில் வரும் தேர்தலில் காங்கிரஸ் 170க்கும் குறைவாக இடங்களைப் பிடித்து ஐமுகூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்குமெனில் காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி பிரதமர் ஆக விரும்பமாட்டார் என்பதுவே. மன்மோகன் சிங்குக்கு மூன்றாவது முறையாக வாய்ப்பு தரப்பட மாட்டாது. எனவே காங்கிரசில் இருந்து வேறு நபருக்குத் தான் வாய்ப்பளிக்கப் படும்” என்கிறார் டெல்லியில் உள்ள ஓர் அரசியல் விமர்சகர்.

அந்த வேறு நபர் என்கிற இடத்துக்கு இப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வந்துசேரும் வாய்ப்புகள் இருப்பதாக அவர் மட்டுமல்ல வேறுபல முக்கிய பத்திரிகையாளர்களும் யூகம் தெரிவிக்கிறார்கள்.

ஒரு சர்வதேச பத்திரிகையின் இணையதளமும் இதேபோல் ப.சி குறித்து செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. நிதிஅமைச்சகத்தில் இருந்து உள்துறைக்கு சிதம்பரம் மாற்றப்பட்டு பொருளாதார நிலை சரிவைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் அவருக்கு பிரியமான நிதியமைச்சகத்துக்குத் திரும்பினார். மும்பைத் தாக்குதல்களைத் தொடர்ந்து அவருக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தாலும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான ஆபரேஷன் கிரீன் ஹண்ட்டுக்காக சிதம்பரம் நினைவு கூரப்படுவார்.

சமீபத்தில் ஐமுகூ அரசு அன்னிய நேரடி முதலீடு குறித்த பிரச்னையில் தப்பிப் பிழைத்தபின்னர் சிதம்பரத்தின் பிரதமர் பதவி வாய்ப்புகள் பற்றி அதிகம் பேசப்படுகிறது. 5.5 சதவிகிதம் என்ற குறைவான விகிதத்தில் இருக்கும் பொருளாதாரத்தை திசைதிருப்புவது, காங்கிரஸ் கட்சிக்கு நாடு தழுவி அளவில் வாக்காளர்களிடம் இருக்கும் ஆர்வமின்மையை மாற்றுவது ஆகிய இரண்டு பொறுப்புகள் அவரிடம் உள்ளன. முதலாவதை அவர் பொருளாதார சீர்திருத்தங்களை மேலும் விரைவாகச் செய்வதன் மூலம் செய்யவேண்டும். இரண்டாவதைத்தான் அவர் நேரடியாக மத்திய அரசி மானியங்களை பயனாளிகளுக்கு பணமாகக் கிடைக்க வைப்பதன் மூலம் செய்கிறார். இந்த ஜனவரி முதல் நாட்டில் 51 மாவட்டங்களில் மத்திய அரசின் 29 நலத்திட்ட உதவிகள் பணமாக பயனாளிகளைப் போய்ச்சேரும். 2013-க்குள் அதாவது 2014 தேர்தல் வருவதற்குள் இந்தியாவின் 629 மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். “எதிர்க்கட்சிகள் இதை எதிர்க்கிறார்கள் என்றால் சும்மா இல்லை. இடையில் சுரண்டல் இன்றி போய்ச்சேரும் பணம் வாக்காக மாறும் வாய்ப்பு உள்ளது. ஆனால் யாராலும் இதைத் தடுக்க முடியாது. நலத்திட்டங்களை அளிப்பது சட்டப்படி சரியான ஒன்றே” என்று கருத்து தெரிவிக்கிறார் நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்.

மத்திய அரசின் பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்கும் திட்டத்துக்கு முன்பு ப.சி  எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இப்போது அத்திட்டம் ஐமுகூ அரசின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் மிகமுக்கியத் திட்டம் என்று அவர் கூறுகிறார். ஜெய்ப்பூரில் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் முதல் முறையாக ப.சி. இந்தியில் உரையாற்றியதும் கவனத்துடன் பார்க்கப்படுகிறது.

2013இல் அவர்  தர  இருக்கும் பட்ஜெட் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் செயல்படாத அரசு என்று தற்போது வர்ணிக்கப்படும் வந்த மன்மோகன் அரசுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு அதுதான். பணவீக்கமும் மற்ற விஷயங்களும் அதற்குள் கட்டுக்குள் வந்துவிட்டால் ப.சியின் பட்ஜெட் அவரது செல்வாக்கை மேலும் அதிகரிக்கும். அடுத்த தேர்தலில் ஏற்கெனவே பார்த்ததுபோல் பாஜக மோடியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தி போட்டியிடும் வாய்ப்புகள் உள்ளன. அவர் குஜராத்தில் சிறந்த பொருளாதார நிர்வாகத்தை அளித்தவர். எனவே அவரது தனித்திறனாக அதுவே முன்னிலைப் படுத்தப்படும். நாட்டின் பொருளாதார நிர்வாகமே 2014 தேர்தலின் முக்கியப் பிரச்னையாக முன்னிறுத்தப்படும்போது காங்கிரசும் அதையே முன்னிறுத்தி எதிர்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படும்.

ஏற்கெனவே கட்சிக்குள் இருந்த சிதம்பரத்தின் போட்டியாளரான பிரணாப் ஜம்மென்று குடியரசுத் தலைவர் ஆகிவிட்டார். பொதுவாக மக்கள் செல்வாக்கு இல்லாத ஆனால் கெட்டிக்காரர்களாக இருப்பவர்கள்தான் மத்தியில் நேரு குடும்பத்தை அல்லாத பிரதமர்களாக கோலோச்சி இருக்கிறார்கள். மன்மோகன் சிங் இடத்தை ப.சி நிரப்பமுடியும். ஆனால் சோனியா-காந்தியின் முடிவைப் பொறுத்தது. ஆனாலும் சோனியாவும் பிரதமர் பதவியில் அமர்வதற்கு திறமையும் தகுதியுமே முக்கியம் என்பதை அறிவார்.

தமிழ்நாட்டில் இருந்து இன்னொருவருக்கும் மத்தியில் செல்வாக்கும் செலுத்த ஆர்வமும் வாய்ப்புகளும் இருக்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா. இங்கே கடந்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தவர். டெல்லியில் ஒரு மாநிலக்கட்சி ஏதாவது செல்வாக்கு செலுத்தவேண்டுமெனில் அது அதிகப்படியான எம்பிக்களைக் கொண்டிருக்க-வேண்டும். ஜெ. இதை நன்றாக அறிவார். கடந்த டிசம்பர் 24-ம் தேதி எம்ஜிஆர் நினைவுநாளில் அதிமுகவினர் எடுத்துக்கொண்ட உறுதிமொழி இது: “பாராளுமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்கனியைப் பறித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமையும் வகையிலும் எதிர்கால இந்தியாவை நிர்ணயம் செய்யக்கூடிய அதிகாரத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பாதங்களில் சமர்ப்பிக்கும் வகையிலும் பணியாற்றுவோம்.”

தேர்தல் நடந்து இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை. மின்வெட்டு மிகப்பெரிய பிரச்னையாக அவருக்கு முன்னால் நிற்கிறது. 2014-க்குள் மின்வெட்டுப் பிரச்னை ஓரளவுக்குச் சரியாகிவிடும் என்றே வைத்துக்கொள்வோம்.

வலுவான கூட்டணி? விஜயகாந்த் கூட்டணியில் இருந்து அனுப்பப்பட்டுவிட்டார். அவர் காங்-திமுக கூட்டணியில் இணையவே வாய்ப்புகள் அதிகம். கம்யூனிஸ்டுகள் மட்டுமே அவருடன் உறுதியாக இருப்பார்கள் என்று நம்பலாம். மதிமுக, பாமக- ஆகிய இரண்டு கட்சிகளை அவர் ஒருவேளை (ஒருபேச்சுக்கு வைத்துக்கொள்ளுங்கள்) சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் இந்த பலம் போதுமா? பாஜகவுடன் மத்தியில் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி வைத்துக்கொள்வதையே அவர் விரும்புவார். ஏனெனில் தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் வாக்கு வந்துசேராது. அவரது டெல்லி வாய்ப்புகள் இப்போதைக்கு மேலோட்டமாகப் பார்க்கையில் அவ்வளவு பிரகாசமாக இல்லையெனிலும் அரசியல் சூழல்கள் மாறக்கூடியன. கடந்த 15 ஆண்டுகளாக திமுக தன் சிறப்பான கூட்டணிச் செயல்பாடுகளால் மத்தியில் எல்லா ஆட்சியிலும் இடம் பிடித்து வருகிறது என்பது அவருக்குத் தெரியும்.  அரசியல் உலகம் மாறிக்கொண்டே இருக்கும். திமுகவுக்குக் கிடைத்த அந்த டெல்லிவாய்ப்பு முதலில் அதிமுகவுக்குத் தான் கிடைத்தது. ஜெ. அதைப் பிடித்துக்கொள்ளாமல் தவற-விட்டார். மீண்டும் அந்த வரலாறு திரும்பு-மென எதிர்பார்க்கிறார். ஆனால் அதற்கு தமிழ்நாட்டில் அவர் தன்னை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும்.

“ஜெ. பிரதமராக முடியுமா என்று அதிமுக-வினர் பலர் கேட்கிறார்கள். 2014-ல் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் போய் பாஜகவுக்கு ஆட்சி அமைக்கும் கட்சியைத்தெரிவு செய்யும் அளவுக்கு செல்வாக்கு இருக்குமெனில் நிதிஷ்குமார், ஜெயலலிதா இருவருக்கும் வாய்ப்பு இருக்கலாம். ஜெயலலிதாவிடம் அதிக எம்பிக்கள் இருப்பின் தமிழ்நாட்டுக்கு வாய்ப்பு இருக்கிறது” என்று சொல்கிறார் பெயர் சொல்லவிரும்பாத பிரபல அரசியல் விமர்சகர் ஒருவர்.

தமிழ்நாடு, மேற்குவங்கம், உத்தரபிரதேசம், பீஹார், திரிபுரா, சிக்கிம், குஜராத் என்று பல மாநிலங்களில் காங்கிரஸ் 20 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. ஆந்திராவில் ஜகன்மோகன் ரெட்டியுடனான மோதலால் நிலைமை மோசமாகவே உள்ளது. என்பதால் காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடிக்கும் வாய்ப்பும் குறைவே. இப்படி 2014-ல் டெல்லியில் முடிவுகள் குழப்பமாக இருந்தால் மூன்றாவது அணி ஒன்று ஆட்சியைப் பிடிக்கும் நிலை உருவாகும். ஜெவுக்கு மோடி, சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக் போன்றவர்களிடம் உள்ள நட்பு கைகொடுக்கலாம்.  பிரதமர் நாற்காலியில் உட்கார்கிறாரோ இல்லையோ கிங்மேக்கராக அவர் நிச்சயம் இருக்கக் கூடிய வாய்ப்புகள் அவருக்கு உள்ளன.

திமுகவைப் பொறுத்தவரை காங்கிரசுக்கு அது தன்னை நேர்ந்துவிட்டுக் கொண்ட கட்சியாக சில ஆண்டுகளாகச் செயல்படுகிறது என்பதால் அதன் தலைவருக்கு டெல்லி நாற்காலி மீதான கனவுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆகவே, தமிழனின் பிரதமர் கனவு 2013-ன் தொடக்கத்தில் இப்படித்தான் இருக்கிறது. போகப்போகப் பார்க்கலாம்.

ஜனவரி, 2013.